திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலியை பாதாள லோகம் அனுப்பியபின், இங்கு வந்து வழிபட்டார். அதனால் இக்கோயில் 'மாணிகுழி' என்று பெயர் பெற்றது. மாணி - பிரம்மச்சாரி. வாமனர் வழிபட்டதால் இத்தலத்து இறைவன் 'வாமனபுரீஸ்வர்' என்று அழைக்கப்படுகிறார். வாமனர் வழிபடுவதற்கு 'குபேர பீமசங்கர ருத்ரன்' காவலாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் 11 ருத்திரர்களுள் ஒருவர்.
தேவாரப் பாடல்களில் இத்தலம் 'உதவி மாணிக்குழி' என்று குறிப்பிடப்படுகிறது. வடநாட்டு வணிகரான அத்ரி என்பவர் இப்பகுதிக்கு வந்தபோது திருடர்கள் அவரை வழிமறித்து உடைமைகளைப் பறித்தனர். அப்போது இறைவன் திருடர்களிடமிருந்து அந்த வணிகரைக் காத்து அருள்புரிந்தார். அதனால் இத்தலத்திற்கு 'உதவி' என்றும், இறைவருக்கு 'உதவிநாயகர்' என்றும் அம்பிகை 'உதவிநாயகி' என்றும் அழைக்கப்படுவதாகவும் தலபுராணம் கூறுகிறது.
சுவாமி, இறைவியுடன் இருப்பதாகக் கருதி மூலவர் சன்னதியில் எப்போதும் திரையிடப்பட்டிருக்கும். தீபாரதனையின்போது மட்டும் திரையை சிறிது விலக்கி தரிசனம் காட்டுகின்றனர். மூலவர் சிறிய லிங்கமூர்த்தி. எப்போதும் இறைவியுடன் சுவாமி இருப்பதாகச் சொல்லப்படுவதால் இத்தலத்தில் இரவு பூஜையான அர்த்தசாம பள்ளியறை வழிபாடு நடைபெறுவது கிடையாது.
திருவண்ணாமலையில் கார்த்திகையில் பரணி தீபம் ஏற்றப்படுவது போல் இத்தலத்தில் ரோகிணி நட்சத்திரத்தன்று தீபம் ஏற்றுகின்றனர். இக்கோயிலில் 4 யுகங்களுக்கும் 4 லிங்கங்கள் (கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம்) உள்ளன. 'விஷ்ணு சித்தர் லிங்கம்' என்னும் லிங்கமும் உள்ளது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். அருணகிரிநாதரும் இத்தலத்து முருகப்பெருமான பாடியுள்ளார். காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். தொடர்புக்கு : 04142-224 328. |